காந்திஜியும் சுவாமிஜியும் சந்திந்திருந்தால்....?
-சுவாமி விமூர்த்தானந்தர்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆற்றிய உரையின் தொகுப்பு

காந்திஜி தன் சொந்த வாழ்க்கையையே சத்தியத்துடன் தான் நடத்திய பரிசோதனையாகவே வரையறுத்தார் (The Story of My Experiment with the Truth). அவர் நடத்திய சத்திய பரிசோதனைகளில் சில வெற்றிகரமானது. சில தோல்வி அடைந்தன. அவருடைய பரிசோதனைகளின் முழுமையான மதிப்பைக் காலம்தான் தீர்மானிக்க முடியும். ஆனால், அதில் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன.

முதலாவது, காந்திஜி தனது வாழ்க்கையை வெளிப்படையாக வைத்திருந்தார்.

இரண்டாவது, தன் வாழ்க்கையை, தான் மேற்கொண்ட சத்திய பரிசோதனைகளைக் கவனிக்கும் யாரும் தனது தவறுகளைப் புறக்கணித்துவிட்டு, நல்லனவற்றை, ஏற்றதை மட்டும் பின்பற்ற வேண்டுமென எழுதினார்.

சிறந்த நேர்மையுடைய தலைவரால் மட்டுமே எதையும் மறைக்காமல் தனது தவறுகளையும்கூட பொதுவில் வெளிப்படுத்த முடியும். தனிமனிதராக, ஒரு மாபெரும் தலைவராக அவரது வாழ்க்கையைக் கவனிக்கும் எவருக்கும் இன்றும் அவை உத்வேகமூட்டும். இந்திய வரலாறு அவர் இல்லாமல் எழுதப்படவே  முடியாது.

மூன்று வழிகளில் காந்திஜி…..

காந்தி‌ஜியை மூன்று வழிகளில் புரிந்து கொள்ளலாம். ஒன்று, காந்திஜி மீது பற்றுகொண்டு அவரின் கொள்கைகளைத் தங்களால் முடிந்த வகையில், முடிந்ததைப் பின்பற்றிய காந்தியர்கள் (Gandhians) மூலமாக. ஆனால் அந்த காந்திஜி பிம்பம் அவர்களுடையது. அந்த காந்தியர்களின் புரிதலுக்கேற்ப குறை நிறைகளுடையது.

இரண்டாவது, கடந்த காலத்தில் கூறப்பட்ட காந்திஜியின் கருத்துகள் திரண்டு காந்தியம் என்று ஓர் ‘இஸமாக’ (Gandhisam) இன்று இருக்கிறது. காந்தியத்தின் வாயிலாக அறியப்படும் காந்திஜியும் முழுமையானவராக இருக்க முடியுமா? இருக்காது அல்லவா!

மூன்றாவதாக, காந்திஜி வழியாகவே காந்திஜியை அறிவது. அவரின் வாழ்க்கை மற்றும் எழுத்துக்கள் வழியாக நாமாகவே காந்திஜியை அறிவது, உணர்வது.

இவ்வாறு காந்திஜியின் பல்வேறு வாழ்க்கைச் சந்தர்ப்பங்களில் அவர் நடந்து கொண்ட விதத்திலிருந்து நாம் அறியும் காந்திஜியே நமக்கு மிக அணுக்கமானவராக இருப்பார்.

உதாரணமாக ஆரம்ப காலத்தில் ஒரு முறை,  மறுநாள் வழக்காட வேண்டிய வழக்கிற்காகத் ’தயார்படுத்திக் கொள்ள’ அவரிடம் ஒருவர் சொன்னதற்கு, “பொய் சொல்கிறவர்கள்தான் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். என் கட்சிக்காரரிடத்தில் உண்மை இருக்கிறது. நான் உண்மையின்  சார்பாக வாதாடுகிறேன். இன்றும் நீதிமன்றத்தில் உண்மையைத்தான் சொன்னேன். நாளையும் உண்மையை மட்டும்தான் சொல்வேன். உண்மையைச் சொல்வதற்குப் பயிற்சி எதற்கு?” என்று கூறினார்.

இதில் நாம் கண்டடையும் காந்திஜியே நமக்கான காந்திஜி.

காந்திஜியின் ஆயுதமான அறப்போராட்டம், அஹிம்சைக் கொள்கை “அஹிம்சையே உயர்வான அறம்” -அஹிம்ஸா பரமோ தர்ம: என்ற இந்து தர்ம வாழ்வியல் நெறியிலிருந்து அவர் அடைந்தது. ஓர் உயிரால் நமக்குத் துன்பம் வருமென்றாலும் அந்த  உயிரையும் நேசித்து நன்மை செய்வதே அகிம்சை என்னும் இந்து தர்ம சாஸ்திரத்தின் சாரம் காந்திஜியின் வழியாகப் பாமர மக்களையும் சென்றடைந்து. அஹிம்சை என்பது கோழைத்தனமல்ல, உண்மையான வீரனே அஹிம்சாவாதியாக இருக்க முடியும் என்கிறார் காந்திஜி.

“பாவத்தை வெறுத்திடு, பாவியை அல்ல” என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு. காந்திஜி இந்தக் கருத்தை, ‘வெள்ளையர்களின் ஆட்சியை, அடக்குமுறையை, அன்னிய ஏகாதிபத்தியத்தை, அவர்களது கலாச்சாரம் நம் மக்களைக் கெடுப்பதை வெறுக்க வேண்டுமேயன்றி, வெள்ளையர்களை அல்ல’ என்று வளர்த்தெடுக்கிறார்.

உலகில் அதிகம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்  காந்திஜி. அவரை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம், ஆனால் அவரை ஒதுக்க முடியாது. அனைவரும் ஏதாவது ஒருவகையில் காந்தியுஜிடன் சம்பந்தப்பட்டே இருப்பார்கள்.

தென் ஆப்பிரிகாவின் நெல்சன் மண்டேலா உட்பட எத்தனையோ தலைவர்களுக்கு அஹிம்சைவழிப் போராட்டத்திற்கான முன்மாதிரி காந்திஜிதான். இந்தியாவிற்குப் பிறகு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அஹிம்சைப் போராட்ட வழியில் சுதந்திரம் அடைந்துள்ளன. அதற்கு முன்மாதிரியாக இருந்தது, இந்து மதத்தின் அஹிம்சைக்கொள்கையும், அதைத் தன் வாழ்நாளில் கடைப்பிடித்துக் காட்டிய காந்திஜியும்தான்.

சுவாமி விவேகானந்தர் , “நர சேவையே நாராயண சேவை” என்பார். மக்கள் துயரைத் துடைப்பதே சுவாமிஜியின் ஆன்மீகம். சுவாமிஜியின் இந்தக் கொள்கையின் தாக்கத்தை காந்திஜியிடத்தும் காணலாம்.

காந்திஜி நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவர். ஆனாலும் ஒருமுறை மாலை பிரார்த்தனைக்குத் தாமதாக வந்தார். அதற்கு அவர், “வயதான ஒரு தாயும் மகளும் அவர்களின் கஷ்டத்திற்குத் தீர்வு கேட்டு வந்திருந்தனர். அதைச் சொல்லிவிட்டு வந்தேன்” என்றார்.

“பாபுஜி, அவர்களை இங்கே வரச் சொல்லிவிட்டு, பிரார்த்தனை முடிந்ததும், அவர்களது கஷ்டத்தைக் கேட்டு, உதவி செய்திருக்கலாமே?” என்று யாரோ கேட்டார். அப்போது காந்திஜி,
“நான் பிரார்த்தனை செய்வதே நன்றாகச் சேவை செய்வதற்காகத்தானே? துயரத்தில் இருப்பவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது, அதைச் செய்வதுதான் உண்மையான, சிறந்த பிரார்த்தனை” என்றார்.

‘மக்களுக்கே முக்கியத்துவம்’ என்பது சுவாமிஜியின் கொள்கை, அதுவே காந்திஜியின் வழியும்.

ராமகிருஷ்ண இயக்கத்துடன்…..

ராமகிருஷ்ண இயக்கத்திற்கும் காந்திஜிக்கும் உள்ள தொடர்பு முக்கியமானது. 1901-ஆம் ஆண்டு, அப்போது அவ்வளவாகப் பிரபலமாகாத காந்திஜி ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகமான பேலூர் மடத்திற்கு சுவாமி விவேகானந்தரை நேரில் தரிசிக்கச் சென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காந்திஜி – சுவாமிஜி சந்திப்பு நிகழவில்லை.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவிகள் காந்திஜி மீது நல்ல மதிப்பு கொண்டிருந்தார்கள். சுதந்திரப் போராட்ட காலங்களில் சுவாமி துரியானந்தர் காந்திஜியின் செயல்பாடுகளைப் பாராட்டினார். சுவாமி விஞ்ஞானானந்தர் நேரில் சென்று காந்திஜியைப் பார்த்தார்.

1921-ல் பேலூர் ராமகிருஷ்ண மடத்திற்குச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் பெரிய தலைவராக காந்திஜி மீண்டும் சென்றார்.

அங்கே சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவில் காந்திஜி பேசும்போது, “நான் சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் முழுவதையும் ஆழ்ந்து படித்துள்ளேன். அதன் பின் எனது தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகரித்தது. ஆகவே இளைஞர்களே, சுவாமி விவேகானந்தர் வாழ்ந்து, முக்தியடைந்த இந்த மண்ணிலிருந்து சுவாமிஜியின்  ஆன்மீகப் பேராற்றலில் சிறிதையாவது உள்வாங்கிக் கொள்ளாமல் வெறுங்கையுடன் திரும்பாதீர்கள்” என்று தேசத்திற்கே அறிவுறுத்தினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸோ, பகத்சிங்கோ, காந்திஜியோ – சுவாமி விவேகானந்தரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருந்தால் இந்திய சுதந்திரப் போராட்டம் இன்னும் அதிக வீரியத்துடன், ஆன்மீகப் பலத்துடன், சீரியதாக, முறையானதாக இருந்திருக்கும்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை நேரில் கண்டவர், எப்போதும் கடவுளுடன் உரையாடிய மகான். அவரின் வரலாற்றை காந்திஜி ஊன்றிப் படித்திருந்தார். ‘பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்’ என்ற அவரது வரலாற்றுக்கு நூலுக்கு காந்திஜி வழங்கிய அணிந்துரையானது அற்புதம். ஸ்ரீராமகிருஷ்ணரை அவர் தரிசித்த விதம் மிக அலாதியானது.

“பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு பரம்பொருளை நேராக காண்பதற்குரிய பயிற்சியின் வரலாறு. அது நம்மையும் கடவுளை நேருக்கு நேராகக் காணச் செய்கிறது. அவருடைய வரலாற்றைப் படிக்கும் எவருக்கும் கடவுள் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் அநித்தியம் என்னும் நம்பிக்கை ஏற்படாமல் போகாது. அவருடைய உபதேசங்கள் வெறும் சாஸ்திரங்களைப் படித்தவர்களின் உபதேசங்கள் அல்ல. அவை அனுபவம் என்னும் புத்தகத்தின் ஏடுகள். அவருடைய சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள். எனவே அவை படிப்பவரின் மனதில் அழியாத முத்திரையைப் பதிக்கின்றன. எதையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் இந்தக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒளிமயமான, உயிரோட்டம்  ததும்பும், கடவுள் நம்பிக்கைக்கு உதாரணமாக விளங்குகிறார். ஸ்ரீராமகிருஷ்ணர் இல்லையென்றால் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆன்மீக ஒளியின்றி வேதனையில் வாடிக்கிடப்பார்கள். ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை அஹிம்சை வாழ்க்கையின் சிறந்த எடுத்துக்காட்டு” என்று நவம்பர் 12, 1924-இல் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

தன்னை நன்கு புரிந்துகொண்டவர்களாலேயே மாமனிதர்களையும், மகான்களையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியுமோ!

காந்திஜியிடம் மரணத்தைப் பற்றிய பயம் இருந்ததில்லை. போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்கிற அச்சமும் இல்லை. “ஸ்ரீராமன் எத்தனை காலம் நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறாரோ, அத்தனை காலம்தான் நான் வாழ்வேன்” என்றார்.

யார் சரியான வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அவர்களே சாவைத் துச்சமாக மதிப்பார்கள். எப்பொழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ இருந்தாலும், இடைவிடாத ராம நாம ஜபம் செய்த காந்திஜி, ஒரு கடித்தில் இவ்வாறு எழுதுகிறார்:

“ஸ்ரீராமனின் சேவகன் நான். ராமர் விரும்புகிறவரை, அவருக்கான பணியை நிறைவேற்றுவேன். சத்தியம் மற்றும் அஹிம்சையின் வலிமையை உலகிற்கு உணர்த்தக்கூடிய ஒரு மரணத்தை ராமர் எனக்கு அருளினால் நான் எனது வாழ்க்கை லட்சியத்தில் வெற்றி பெற்றவனாவேன். நான் கடவுளை மனப்பூர்வமாகப் பின்தொடர்ந்திருந்தால், கடவுளைச் சாட்சியாகக் கொண்டு நான் செயல்பட்டிருந்தால், அத்தகைய மரணத்தைக் கட்டாயம் எனக்குக் கடவுள் அருள்வான்.

“யாராவது ஒருவன் என்னைக் கொல்வானானால், அந்தக் கொலையாளியின் மீது எத்தகைய கோபமும் எனக்கு ஏற்படக் கூடாது. நான் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே மரணமடைய வேண்டும். இப்படிப்பட்ட எனது விருப்பத்தைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் நான் இன்று வெளிப்படுத்துகின்றேன்”. -ஆதாரம்: காந்திஜியின் 200 இறுதி நாட்கள், ஆசிரியர்:
வி. ராமமூர்த்தி – பக்கம் 839.

காந்திஜியின் இந்த விருப்பம் அவ்வாறே நடந்தது என்பது வரலாறு. சாமானியர்கள் கர்மத்தின் வசப்பட்டு பிறக்கிறார்கள். மகான்கள், அருளாளர்கள் எல்லாம் செயற்கரிய செயல்களைச் செய்வதற்காக, காலத்தின் தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட பணியை
நிறைவேற்றுவதற்காகவே பிறவி எடுக்கிறார்கள்.

காந்திஜியின் கடமை நிறைவேறியதும் ஸ்ரீராமன் அவரை அழைத்துக் கொண்டான்.

 

சுவாமி விமூர்த்தானந்தர்
22 நவம்பர், 2020
ராமகிருஷ்ணா மடம், தஞ்சாவூர்

Related Posts