தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாட சில பிரார்த்தனைகள்
- சுவாமி விமூர்த்தானந்தர்

 1. நமக்குள் உள்ள அறியாமை, அகங்காரம் போன்ற இருள் நிறைந்த, நம்மைக் கீழ்நிலைக்குத் தள்ளும் தாமஸ குணங்கள் மறையட்டும். அதற்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் உள்ளங்களில் ஞான தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
 2. அன்பும் அருளும் லட்சுமி கடாட்சமும் நிம்மதியும் குடும்பங்களின் ஒற்றுமையும் உங்கள் இல்லங்களில் விளங்கிட அருள்மிகு அன்னை ஸ்ரீசாரதாதேவி மங்கல தீபமாக இந்தத் தீபாவளி நன்னாளில் உங்களோடு என்றும் வீற்றிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.
 3. நமது நெஞ்சங்களிலும்நாட்டிலும் ஊடுருவியுள்ள அன்னிய மோகம், அசுரத்தன்மை, பேடித்தனம் போன்ற நவீன நரகாசுரன்கள் மறைந்து நாம் அனைவரும் எல்லா பலவீனங்களும் அற்று ஆன்மபலம் அடைவதற்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் என்ற சக்தி தீபத்தை நம்முள் ஏற்றிக்கொள்வோம்.
 4. அடியார்க்கு அதிவேகத்தில் அருளும் ஸ்ரீகிருஷ்ணா, தன் மகனான நரகாசுரனை வதைக்க சத்தியபாமாவேண்டியது போல்,அடியேனும் எனது அறியாமை மற்றும்ஆணவத்தின் உருவான எனது அகங்காரத்தை – எனது நரகாசுரனை வதைக்க வர வேண்டும்.
 5. இறைவா, தீபாவளி தினத்தன்று எண்ணெயில் லட்சுமிதேவியும் நீரில் கங்காதேவியும் எழுந்தருளுவதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்று நான் நீராடும்போது கங்கையும் திருமகளும் என்றும் என்னுள் தங்குவதற்கு அருள் புரியுங்கள்.
 6. ஆண்டவா, தீபாவளிக்காகப் புத்தாடை அணிகிறேன். இந்த உடலே ஓர் ஆடை என்று கூறுகிறது பகவத்கீதை. உடலெனும் ஆடைகளை நான் பல பிறவிகளில் மாற்றிக் கொண்டே வருகிறேன். இந்தப் பிறவியிலாவது ஐயனே, உன்னருளால்அடியேனுக்குப் பொன் உடலும் புகழ் உடலும் பக்தியும் முக்தியும் கிடைப்பதற்குக்கருணை புரியுங்கள்.
 7. கடவுளே, என் மதத்திலுள்ள தீண்டாமை, ஏழைகளைப் புறக்கணிப்பது, தீவிரமான சமயப்பற்று இல்லாமை போன்ற சில குறைபாடுகளை காந்திஜி, சுவாமி விவேகானந்தர், வள்ளலார், ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் போன்ற அருளாளர்கள் சுட்டிக் காட்டினார்கள்.அந்தக் குறைகளைஏற்றுக்கொண்டு நாங்களே அவற்றைஇன்றாவது நீக்கிக்கொள்ள அருள் செய்யுங்கள்.
 8. இறைவா,இவ்வாறு குறைநீக்கம் செய்யப்படாத குற்றத்தால் எங்களது சமயத்தை அரைகுறை நாத்திகர்களும் பிற மதத்தில் உள்ள சில புல்லுருவிகளும் சீண்டிப் பார்க்கிறார்கள். எல்லா சமயத்தினரும் அமைதியுடனும் சமுதாயப் பொறுப்புணர்விலும்ஆன்மிகப் புரிதலுடனும் விளங்கிட அனைவருக்கும் அருளுங்கள்.
 9. நமது நாட்டைத் தொடர்ந்து பலவீனப்படுத்திவரும் இந்து மத விரோதப்போக்கு,ஜாதி மத பேதம்,கொரானாத் தொற்று பயம்,அரசியல் வியாதிகள் ஆகிய அக்ஞான இருள் முற்றிலும் அழியட்டும்.
 10. தேசியமும், தெய்வீகமும் என்ற ஞான ஒளி பரவட்டும். சுவாமி விவேகானந்தர் காட்டிய நமது தேசிய லட்சியமான துறவும் தொண்டும் நமது ஆட்சியாளர்களிடம் வீரியம் பெறட்டும்.நமது பாரத மாதா பாரினில் மேன்மேலும் சிறப்பு பெறட்டும்.

இவை யாவும் நிறைவேறிட இறைவா உன்னையே வேண்டிக்கொள்கிறோம்.

தீபாவளியைத் திறம்படக் கொண்டாட உறுதிமொழிகள் சில
- சுவாமி விமூர்த்தானந்தர்

 1. ’தைலே லட்சுமி, ஜலே கங்கே, தீபாவளி தினே வஸேத்’- தீபாவளி தினத்தில் எண்ணையில் லக்ஷ்மி தேவியும் நீரில் கங்காதேவியும் வாசம் செய்கிறார்கள் என்பதை சிரத்தையுடன் நம்பி எண்ணைய் நீராடுவேன்.என் குடும்ப வழக்கப்படி, பூஜைகளைச் செய்வேன். இறைவனாகவும் இறைவியாகவும் எண்ணி என் தாய் தந்தையர்களை வணங்குவேன்.
 2. மூத்தோர்களையும் பெரியோர்களையும் மரியாதையுடன் வணங்கச் என் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவேன்.
 3. நரகன் என்பவன் அறியாமை இருள் படைத்தவன். ஆண்டவனையே புறக்கணிக்கும் அகங்கார சொருபி அவன். அந்த இருள் நம் வீட்டிலும் நம் நெஞ்சங்களிலும் இருக்கக் கூடாது என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன்.
 4. தீபாவளிக்காக முடிந்தவரை உள்நாட்டுப் பொருள்களையே வாங்கி எனது தேசபக்தியை நிரூபிப்பேன். சிறு வியாபாரிகளிடம் பேரம் பேச மாட்டேன்.
 5. என் மதத்தில் இருந்துகொண்டே அதில் சிரத்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு தீபாவளியின் முக்கியத்துவத்தை இன்று கூறுவேன்.
 6. இன்று மாற்று மதத்து நண்பர்களுள் ஒரு சிலருக்காவது தீபாவளியின் பெருமையை எடுத்துச் சொல்வேன்.
 7. இன்று தொலைக்காட்சியில் தேவையில்லாததைக் கண்டு என் நேரத்தைத் தொலைக்க மாட்டேன். மாறாக, கோவில், ஆசிரமம், முதியோர் இல்லம் போன்றவற்றுக்குச் சென்று நிம்மதி பெறுவேன்; பிறருக்கும் என்னாலான நிம்மதியை சேவையின் மூலம் வழங்குவேன்.

சுவாமி விமூர்த்தானந்தர்
12 நவம்பர், தீபாவளி 2020
ராமகிருஷ்ணா மடம், தஞ்சாவூர்

Related Posts