தேவிக்கு வசமாகு; அவள் உனக்குக் கவசமாவாள்!
- சுவாமி விமூர்த்தானந்தர்

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை முடிந்து விஜயதசமி தினத்தில் தேவியின் பிரதிமையை கங்கையிலோ, கடலிலோ கரைப்பார்கள். அப்போது பக்தர்களின் உள்ளமும் கரையும். கண்ணீர் பெருகும் சிறு கங்கையைப் போல.

1986 -இல் நாங்கள் பேலூர் மடத்தில் பிரம்மச்சாரிகளுக்கான டிரெய்னிங் சென்டரில் இருந்தோம். துர்கா பூஜை முடிந்து விசர்ஜனம் தொடங்கியது.  ஒன்பது தினங்கள் எங்களோடு கொண்டாட்டத்தில் இருந்த தேவி ஏன் எங்கள் கண்ணிலிருந்து மறைந்தார்? எங்களது நெஞ்சம் மட்டுமல்ல, மொத்த பேலூர் மடமே ஏன் திடீரென்று வெறிச்சோடிவிட்டது?

தமிழ்நாட்டிலிருந்து சென்ற எங்களுக்கு மேற்கு வங்காளத்தின் துர்கா பூஜை மரபு பிடிபடவில்லை. ஏற்க முடியவில்லை. விநாயக சதுர்த்தியன்று விநாயகரை நாம் ஆற்றிலோ, கிணற்றிலோ இட்டாலும் அது இந்த அளவிற்கு வலியைத் தந்ததில்லை.

ஆனால் அழகான தேவியின் திருவுருவத்தில் உருகி உருகி பிரேம பூஜை செய்துவிட்டு எப்படி இவர்களால் கங்கையில் விட முடிகிறது? இது என்ன பக்தி?

அன்னையின் திருவுருவம் பேலூர் மடத்தின் நாட் மந்திரிலிருந்து அகன்றதும் அங்கே வில்வ இலைகளில் ‘மா’ என்று வங்காளத்திலும் சமஸ்கிருதத்திலும் எழுதி அன்னை இருந்த இடத்தில் சமர்ப்பிப்பார்கள். அந்தச் சடங்கை பிடிக்காமல் நானும் செய்துவிட்டு அழாத குறையாக ஓர் இடத்தில் அமர்ந்து இருந்தேன். சற்று தள்ளி சில துறவிகளும் பரஸ்பரம் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.


அப்போது மூத்த துறவி ஒருவர் வந்து என் சோகத்தைக் கேட்டார். சொன்னேன். அவர் அன்னை துர்க்கை நம்மீது கொண்டுள்ள கருணையைக் கூறினார்:

‘தம்பி, நீ உண்டது உன் வயிற்றில் உரு மாறாமல் இருந்தால் நீ ஆரோக்கியமாக இருப்பாயா? உண்டது சிதைந்து உரு மாறினால்தான் உனக்குச் சக்தி கிடைக்கும் அல்லவா?

‘அதிகாலையில் சூரியன் வட்டமாக அழகாகக் காட்சியளிக்கிறது. அந்த வட்டம் தொடர்ந்து அப்படியே இருந்தால் மக்கள் சுறுசுறுப்பாக உழைக்க ஆரம்பிப்பார்களா? தாவரங்கள் வளருமா? பிற உயிரினங்கள் சோம்பிக் கிடக்கும் அல்லவா?

‘சூரிய உரு உச்சிக்கு வந்து உருவம் கலைந்தால்தான் மனிதர்கள் நடமாடுவார்கள்.

‘தம்பி, இன்று நீ இளைஞன். இதே போலவா எப்போதும் இருக்கப் போகிறாய்? உனது உருவம் மாறத்தான் போகிறது. ஆனால் உனக்குள்ளே மாறாத ஒன்று உண்டு. அது உனது உயிர். அந்த உயிர் சிற்றுயிராக இல்லாமல் பேருயிர் ஆக மாற்றுவதற்கு நீ உன் இளமையைச் செலவிடு. அதற்காகத்தானே நீ ஆன்மீகச் சாதனை செய்கிறாய்!

‘பக்தியை வளர்த்துக் கொள்வதற்காக முதலில் தெய்வ உருவம் நமக்குத் துணை.  பிறகு அந்த உருவம் மறைகிறது, மேலும் நம்மைப் பக்தியில் வளர்க்க.

‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…’ என்றுதானே அருணகிரிநாதர் பாடுகிறார்.

பிறகு அந்த சுவாமிஜி ஒரு சம்பவத்தைச் சொன்னார், ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையிலிருந்து. தேவியின் திருவுருவை ஆற்றில் கரைப்பது பற்றிய எனக்கு இருந்த சோகமும் ஆதங்கமும் குருதேவரின் அன்யோன்ய பக்தரான மதுர்பாபுவிற்கும் இருந்ததாம்.

‘இவ்வளவு அழகான தேவியை, அவளது தெய்வீக சாந்நித்தியத்தை நான் இழக்க மாட்டேன். உயிருள்ளவரை அன்னையை ஆராதிப்பேன். அவளை கங்கையில் விசர்ஜனம் செய்வதை அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார் ஜமீன்தார்.

மதுரின் பேச்சை யார் எதிர்க்க முடியும்? ஆனால் துர்கா பூஜை  விசர்ஜனம் இல்லாமல் நிறைவுறாதே என்று பூஜாரிகள் தவித்தார்கள். யார் சொன்னாலும் மதுர்பாபு கேட்கவில்லை. கொலை விழும் என்று கத்த ஆரம்பித்தார்.

மதுர்பாபுவின் மனைவி ஜகதம்பா பிரச்சினையைச் சரியாகப் புரிந்து கொண்டார். எல்லா பிரச்சினைக்கும் சர்வரோக நிவாரணியான ஸ்ரீராமகிருஷ்ணரைச் சரணடைந்தார். குருதேவரிடம் சென்று மதுர்பாபு விசர்ஜனத்திற்குத் தடையாக இருப்பதைக் கூறினார்.

குருதேவர் மதுர்பாபுவிடம் சென்றார்.  குருதேவரின் காலடியில் மதுர் விழுந்தார். கதறினார்: என்னால் எப்படி என் தாயைப் பிரிந்து இருக்க முடியும்?

திருமணமாகி கணவனோடு அவன் வீட்டுக்குப் போகும் பெண் தன் தாயைப் பிடித்து எவ்வாறு அழுவாளோ அவ்வாறு மதுர் அழுதார். தன் மகள் சிறுமியாகவே வளராமல் இருப்பதை எந்தத் தாய்தான் விரும்புவாள்? தன் மகளும் ஒரு தாயாக மாறத்தான் தாய் திருமணத்தைச் செய்து வைக்கிறாள், அல்லவா?

ஸ்ரீராமகிருஷ்ணர் மதுர்பாபுவி ன் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, ‘மதுர், இதற்காகவா அழுகிறாய்? உன்னை விட்டு துர்க்காதேவி எங்கு சென்று விடுவாள்? நேற்றுவரை அவள் உனக்கு வெளியே இருந்து உனது பூஜையை ஏற்று வந்தாள். இனி உனக்கு மிக நெருக்கமாக உனக்குள்ளேயே அவள் வந்து தங்கிவிடப் போகிறாள். அதுதானப்பா விசர்ஜனம் என்பது. பூஜையின்போது அன்னை ஓருருவில் மட்டுமே இருந்தாள். இனிமேல் உருவம் கடந்து உனக்குள்ளே உன்னோடு என்றும் இருக்கப் போகிறாள்’ என்று கூறி அவரது நெஞ்சைத் தொட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

நம் நெஞ்சையும் தொடும் இந்தச் சம்பவம் நடந்தவுடன் மதுர்பாபு  விசர்ஜனத்தின் தத்துவத்தைப் புரிந்துகொண்டார். அன்னை துர்க்கையை இதுவரை காண வேண்டும் என்றால் பிரார்த்தனை மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் அன்னை எனக்குள்ளே வந்த பிறகு நான் செய்யும் ஒவ்வொரு சொல்லும் அவளுக்குத் துதியாக மாறும்; எனது ஒவ்வொரு காரியமும் அவளுக்கான பூஜையாகும். எனது மொத்த வாழ்க்கையே அன்னையின் சாந்நித்தியத்தில் இனி திளைக்கப் போகிறது என்பதை மதுர்பாபு உணர்ந்தார்; மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.

சுவாமிகள் இந்தச் சம்பவத்தைச் சரியான நேரத்தில் நினைவூட்டினார். அதனால் எனது emotion, devotion ஆனது.

தேவி எனக்குள் புகுந்து என்னை எப்போதும் காக்கக் கவசமாக இருப்பாள் என்பதை என் மனது ஏற்க ஆரம்பித்தது.

சுவாமி விமூர்த்தானந்தர்
28 அக்டோபர், 2020
ராமகிருஷ்ணா மடம், தஞ்சாவூர்

Related Posts